Wednesday, 10 December 2014

அழை

மழை வந்து போன பின் அழகாகும் இலை போல...
அலை வந்து போன பின் அழகாகும் மணல்  போல...
உன் அழை வந்து போன பின் அழகானது என் நிலை... 

Wednesday, 28 May 2014

பின் தொடரும் பித்தன்



பின் தொடரும் பித்தன்

இன்றிவனைக் கொன்றது போதும், நாளை தொடரலாமென நீ
உன் விழிவாளை உறையிலிட்டு வீடு திரும்பும் நேரம்…

கல்லூரிப் படி தாண்டும் உன்னைப் பின் தொடர்கிறோம் நானும்
நின் நிழலும்.. வாயில் விட்டு சிறகடிக்கிறாய், வான் நோக்கியல்ல..

வாகனங்கள் நிறைந்த சாலை நோக்கி.. மலர் சொரியத் தொடங்கின மரங்கள்,
கற்கள் பட்டு உன் பாதக்கமலங்கள் புண்ணாகிவிடக்கூடாதென்று..

மெல்லிய மலர்களைத் தன் தங்கைகளாக பாவிக்கும் நீ அவற்றைத்
தாக்காமல் தாவிச்செல்லுகிறாய்.. குழந்தை சிரிப்போடு..

சாலையைக் கடக்க நீ காத்திருக்க, உனைக்கண்டு சமிக்ஞை விளக்கு
வெட்க்கிச் சிவக்கிறது.. தேவதையொன்று சாலையில் வருவது கண்டு

வாகனங்களனைத்தும் செய்வதறியாது நிற்க, தேர் வரும் திசை நோக்கி நீ நடக்கிறாய் என்றெண்ணி உன் பின்னே நான் நடக்கிறேன்…

ஆனால் நீயோ பேருந்து நிறுத்தம் நோக்கிப் பறக்கிறாய்.. வியக்கிறோம், திகைக்கிறோம்.. நடைபாதையும் நானும்..

“பேருந்து நிறுத்தத்தில் தேர் வந்து நிற்குமா என்ன?” கண் சிமிட்டிக் கேட்கிறது
கம்பத்தில் விளக்கொன்று.. தெரியவில்லையென்று பதில் சொல்லித்

தலையைக் கோதுகிறேன் நான்.. மாலை நேரத்துச் சூரியன் மஞ்சள் வெளிச்சத்தை பொழிய, மர நிழலில் தஞ்சம் சேர்கிறாய் உன் நீண்ட நிழலோடு..

நானும் வந்து சேர்கிறேன் அம்மரத்தோடு.. நிழல்களாய் நாம் சங்கமிக்கிறோம்
கார் நிறத்தோடு… தொடுவானம் நோக்கித் தொலைதூரம் பார்க்கிறாய்..

உந்துகள் ஏதும் வந்தபாடில்லை, சாலை மீதொன்றும் தென்படவில்லை.. புருவம் நெறிக்கிறாய் நீ, என் இதயம் கணக்கிறேன் நான்..

போக்குவரத்துக் கழகம் ஏழேழு தலைமுறைக்கும் நஷ்டத்தில் ஓட சாபமிடுகிறேன்..

மணிக்கட்டை சற்றுத் திருப்பி.. காற்றுக்கும் வலிக்காமல் கையை உயர்த்திக் கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறாய்..

உன் குழந்தை முகத்தில் கவலையின் சாயல்.. அடுத்த சாபம் தமிழ்நாடு அரசுக்கு.. போக்குவரத்துக் கழகத்தை கண்டிக்காததற்கு..

இதற்குமேல் என் சாபத்தை பொறுக்க முடியாது என்பதுபோல் வந்து நின்றது உந்து ஒன்று.. எங்கு நிற்கிறேன், எதற்கு நகர்கிறேன் என்றறியாமல் பின்
தொடர்கிறேன் உனை..

பேருந்துப் படியின் மீது படும் உன் பாதம் நோக்கும் என்னை ஓர விழியில் சந்தேகப்பார்வை பார்க்கிறாய்.. நல்லவன் போல் நடித்து, நாவைக் கடித்து,

எதையோ தொலைத்தவன் போல் தரையைத் தேடுகிறேன்.. படியில் தொற்றிய என்னை பாசத்துடன் உள்ளே வரும்படி நடத்துனர் அழைக்க,

பொங்கி வரும் புன்னகையைக் கொன்றுவிட்டு வெறுப்பையும் நெருப்பையும் வீசுகிறாய் என் பக்கம்.. பெண்களைப் பின் தொடரும் பித்தன் இவன்

என்றெனை நினைத்தாயோ நானறியேன்.. தேவதையின் தேரில் தொற்றிச்செல்லும் வேரறுந்தக் கொடியாய் பேருந்தைப் பற்றிச்செல்லும்
பொடியன் நான்..

தொட்டாச்சிணுங்கி இலையாய் என் இமைகளும், தொட்டியை இழந்த செடியாய் என் தோள்களும், உன் பார்வை பட்டதும் படபடத்து மெலிகின்றன..

ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் கூட இல்லாத அக்கரை பேருந்தின் இருக்கைகள் மீது எனக்கு.. நொடிக்கு நூறு முறை இருக்கைகள்

இருக்கின்றனவா என சரி பார்க்கிறேன்.. நீ நிற்கும் திசை நோக்கி நோட்டமிட.. வேகத்தடை மீதேறி வாகனம் குலுங்க, உன் கூந்தலில் குடியிருந்த

மல்லிகையொன்று தவறி தரையில் விழ, அதை ஆவலுடன் பார்க்கிறேன் நான்.. என் நோக்கமறிந்த நீ புருவம் நெறித்து, பூவை மிதிக்கிறாய்..

மனம் நொந்து சோகத்தில் ஆழ்ந்தவன் போல் தலை குனிந்துப் பின் புன்னகைக்கிறேன் நான்.. ரகசியமாய்.. இதுவரை உன் கூந்தலினின்று

களவாடிய நான்கு மல்லிகை, மூன்று கனகாம்பரம் மற்றும் இரண்டு ரோஜாப் பூக்களை எண்ணி.. நீ இறங்க வேண்டிய நிறுத்தம் வர,

பின் வழி நோக்கி நகர்கிறாய்.. முன்புரம் நிற்கும் என்னைத் தவிற்க. பேருந்து நிற்கும் முன் குதித்திறங்கி குரங்காக நான் தாவி வர,

உன்  வெறுப்பையும் மீறி ஒரு சிறு புன்னகைக் கீற்று ஒளிர்கிறது.. படியிறங்கி வரும் உன்னை வரவேற்க மலர் தூவும் தேவ கன்னிகள் எங்கே போனார்கள்

என நான் இந்திரனைக் கண்டிக்க, உன் வீடு நோக்கி வேகமாய் நடக்கிறாய் நீ..
தேவதைகள் வசிக்கும் வசந்த மாளிகைகளெல்லம் இப்படித்தான்

கட்டுக்காவலுடன் கண்கானிக்கப்படுமோ என வியந்து பார்க்கிறேன் நான்.. உன் வீட்டு காவல்காரனையும் அவன் மீசையையும்..

“போதும், வா போகலாம்” என்று அஸ்தமிக்கும் சூரியன் என்னை அழைக்க,
“அதுவும் சரிதாண்ணே..” எனக்கூறி விடுதிக்குத் திரும்புகிறேன் நான்.

- வெற்றி குமரன்

Thursday, 13 March 2014

காதல் பூ

உன் பார்வையெனும் பருவமழை பொய்த்தாலும் கூட.. 

என் இதயத்தில் விழுந்த உன் காதல் விதை 
இன்று துளிர் விட்டு வளர்ந்து பூத்து நிற்கிறது.. 

பூப்பறிக்க நீ வந்தால் 
உன் கூந்தல் தோட்டத்தில் ஓர் இடம் கிடைக்கும் 
என் காதல் பூவுக்கு.. 

இல்லையேல் 
அக்காதல் பூ செல்ல வேண்டியது 
என் கல்லறைத் தீவுக்கு..... 

- வெற்றி குமரன்

காதல் கவிதை

உயிரை எரித்தேன் விளக்கேற்ற... 
நகத்தைக் கிழித்து, விரலைத் தேய்த்து, 
குருதியிட்டு படைத்தேன் கவிதையை... 
பாதி கவிதை முடியும் முன் விரல்கள் தீர்ந்து போயின... 
மீதி கவிதை முடிக்க என் இதயம் எடுத்து, அழுத்திப் பிழிந்து, 
உதிரம் கொட்டி முடித்தேன் கவிதையை... 
இதோ ரத்தம் தோய்ந்த என் கவிதை உன் முன் என் உயிர் தாங்கி நிற்கிறது...... 

என் உடல் கொண்ட ரத்தம் கொடுத்துவிட்டேன் கவிதையாக.. 
உன் காதல் தா என் உடலில் ஓட.. 

உயிர் விளக்கேற்றினேன் கருகிவிட்டது.. 
உன் பார்வை தா என் பிறவி பிழைக்க....... 

- வெற்றி குமரன்

அழகிப் போட்டி

உன் வீட்டு மொட்டை மாடியில் நீ ஒய்யார நடை நடந்து வரக் கண்ட வெண்ணிலா.. 
தன்னுடன் போட்டியிடத்தான் வருகிறாயோ என்றெண்ணி.. 
உன் முகத்துக்குப் போட்டியாகத் தன் முகத்தைக்காட்டிப் பிரகாசிக்க.. 
ஆரம்பமாயிற்று அழகிப்போட்டி.. 

சித்திரை, சுவாதி முதலிய நட்சத்திரங்கள் பார்வையாளர்களாக வந்தமர.. 
நடுவர்களாக நின்றன மேகங்கள்.. 

சூரியனே தோற்கும் பொலிவுடைய உன் முக செளந்தர்யத்திற்கு முன்னால் நிலவு நிற்க முடியுமா? 
உன் ஒரு புன்னகையில் உண்மையை உணர்ந்த வெண்ணிலா 
வெட்கப்பட்டு மேகத்தின் பின்னால் சென்று ஒளிய.. 
சட்டென சிரித்து விடுகின்றன சித்திரையும் சுவாதியும்.. 


ஒரு மின்னலை வீசிப் பார்த்த மேகம் 
உன் சிரிப்புக்கு அது ஈடாகவில்லை என முடிவு செய்து.. 
போட்டியில் நீ வெற்றி பெற்றதை இடி முழக்கத்தோடு அம்மேகம் அறிவிக்க.. 
உனக்கு மகுடம் சூட்ட விரைந்து வருகிறது மழை.. 

அவையடக்கம் கருதி நீ மகுடம் ஏற்க மறுத்து வீட்டுக்குள் ஓட.. 
மின்னல் ஒளியில் நீ தேவதையாய் ஓடி மறைந்த காட்சி கண்டு 
தென்றலும் புயலென மாறி உன்னைப் பின்தொடர முற்படுகிறது.. 
அதற்குள் நீ கதவைப் பூட்டி தாழிட, 
ஏமாற்றமடைந்து தன் கோபத்தை உன் வீட்டு வாழை மரத்தின் மீது காட்டி விடுகிறது காற்று.. 

நீ வீட்டுக்குள் சென்றுவிட்டாய் என்றறிந்த வெண்ணிலா குளிர் விட்டு வெளியில் வர, 
"ஒரு மானிடப்பெண்ணிடம் தோற்றாயே...!!!" என நிலவைப்பார்த்து சுவாதி நகைக்க.. 
"அவள் மானிடப்பெண்ணாக இருக்கவே முடியாது! தேவகன்னிகையாக இருக்கும்!!" எனக்கூறிய வெண்ணிலா 
உன் வீட்டு சாளரத்தின் ஓரம் வந்து உன் முகம் கண்டு பூரித்து செய்வதறியாது நிற்கிறது.. 

விடியும் வேளை நெருங்க.. 
வெண்ணிலா ஒரு பெருமூச்சுடன் உன் சாளரம் விட்டு நீங்க, 
உன்னை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது விடிவெள்ளி.. 

"இப்படிக் கண் சிமிட்டாமல் யாரைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டபடி 
கிழக்கில் உதித்தது சூரியன்.... 



- வெற்றிகுமரன்

உன் தங்கை

அன்பே நீ..
மழை நனைத்த மலர் போன்றாள்..
மலர் அனிச்சம் தாங்கா மெல்லிடையாள்..

அழகி நின் வருகைக்கு..
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம் நானும்..
என்னருகே அவளுக்கான இருக்கையும் தூணும்..

அந்த நேரத்தில்..
உன் இருக்கையில் விழுந்தது மலர் மஞ்சள் நிறம்..
எனக்குத் துணையாக அனுப்பியது நிழல் மரம்..

அந்தப் பூ..
என்னை நோக்கி உன்னைப்போல் புன்னகைத்து நின்றது..
உன் முந்தானைக் காற்றைப் போல் மணம் வீசவும் முயன்றது..

அழகிய மலரை..
இருக்கையினின்று விலக்க, விலகச் சொல்லவா?
இல்லை நீ வரும் வரை துணையாகக் கொள்ளவா??

அலர் இதுதான்..
அம்மலருக்கு உன் அழகோ மணமோ இல்லையென மறுக்கவா?
அன்றி ஏதோ தனக்குரிய பொலிவுடன் உள்ளதென ஏற்கவா??

அல்லல் நீக்க..
அன்ன நடையில் மின்னல் நகையுடன் நீ வந்தாய்..
தோழிகளாய் தென்றல், மணம், மகிழ்ச்சி கொண்டு வந்தாய்..

அடிப்பாவி
காதலர்கள் நாம் தனியே சந்திப்பதல்லவோ நியாயம்..
இப்படி தோழிகளோடு வந்து சேர்வதென்ன அநியாயம்??

அருகில் வந்துவிட்டாய்..
உன் இருக்கையில் இருக்கும் பூவை நசுக்கிவிடுவாயோ..
"நானிருக்க வேறு துணை தேடுகிறாயோ?" என என்னை பார்வையில் பொசுக்கிவிடுவாயோ..

அஞ்சிய தருணம்..
மஞ்சள் மலர் உன் அழகிலே மெழுகென உருக..
நானோ உன்னையும் உன் தங்கையையும் பார்த்து மருக..

அதிகம் யோசிக்காமல்..
உன் காந்தள் கைகளால் மஞ்சள் மலரை கீழே தள்ளினாய்..
மலர் மரத்தின் மனம் கொண்ட ஆசையை தீயில் தள்ளினாய்..

அய்யோ பாவம்..
எனக்கூவி அப்பூவை என் கைகளில் நான் எடுக்க..
கோபத்தில் உன் பார்வை அம்பை என் மீது நீ தொடுக்க..


ஆத்திரம் கொண்டு..
நீ இருக்கையில் அமராது விலகிச்செல்ல..
மலரும் மரமும் எள்ளி நகைக்கின்றன மெல்ல..

ஆயும் சேயும் சேர்ந்து..
சதி செய்துவிட்டீர்களே.. என கையில் கொண்ட மலரை நான் தூற்ற..
அம்மலரை எரிந்துவிட்டு விரைந்து செல்கிறேன் என்னவளைத் தேற்ற..

- வெற்றி குமரன்

மூன்றாம் சாமத்துக் கவிதைகள்

ஊர் பாரெல்லாம் உறங்கும் அல்லற் பொழுதில்
நான் மட்டும் உறக்கமின்றித் தவிப்பதேன்?

யாவர்க்கும் குளிர் வெளிச்சம் தரும் வெண்ணிலா
எனக்கு மட்டும் அனலாய்த் தகிப்பதேன்?

பருவ வயதில் காதல் வயப்பட்டு..
கனவிலும் நினைவிலும் காணாததைக் கண்டு..
உண்ணப்பிடிக்கவில்லை.. உறக்கம் வருவதில்லை.. எண்ணம் வசப்படவில்லை.. என்று
பலர் கூறக் கேட்டிருக்கிறேன்..
பரிகாசித்து நகைத்திருக்கிறேன்..

ஆனால் இன்று உணர்கிறேன்..
தலைவலியும் வயிற்றுவலியும் மட்டுமல்ல..
காதலும் கலக்கமும் கூட தனக்கென்று வந்தால்தான் தெரியும் என்று....

வெயில் பட்டு தளிர்க்கும் சருகு உண்டா??
இதோ உன் முதல் பார்வை பட்டு சருகாயிருந்த என் மனம் தளிர்விட்டதே...
அது எப்படி??

மழை பட்டு சருகாய் போன பசுங்கிளை உண்டா??
உன்னுடன் பழகி பசுமையாய் தழைத்த என் மனதை
உன் பிரியாவிடைக் கண்ணீரால் சருகாக்கிவிட்டுப் போனாயே..
அதுவும் எப்படி??

இந்த நாட்களில்.. பின்னிரவுகளுக்கு சற்றுப் பின்னால்,
இரவுகளுக்கும் காலைகளுக்கும் இடைப்பட்ட வேளையில்..
என் விழிகளில் உறக்கத்துக்கும் விழிப்புக்கும் மத்தியில்..
என் மூளையின் ஏதோ ஒரு மூலையில்..
கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட நிகழ்வில்..

நடுக்கம் நீங்காத உன் கைகளை என் விரல்களால் பற்றி..
உன் விழிகளின் உள்ளே என் கண்களால் ஊடுருவி..
என் மனம் உன் மனதிடம் கேட்கும் அந்த கேள்வி..

"உனக்கு என்னை நினைவிருக்கிறதா?"

பத்து மலைகள், நூறு பாலைவனங்கள், ஆயிரம் கடல்கள், பத்தாயிரம் பெருங்கடல்கள் தாண்டி
எங்கோ ஒளிந்திருக்கிறது உன் பதில்.. எனக்குத் தெரியாமல் என் கண்களுக்கு மிக அருகாமையில்.......

-வெற்றி குமரன்

She looked at me (My paintings - 9)

I made a garland for her head,
And bracelets too, and fragrant zone;
She looked at me as she did love.......................