Thursday, 13 March 2014

மூன்றாம் சாமத்துக் கவிதைகள்

ஊர் பாரெல்லாம் உறங்கும் அல்லற் பொழுதில்
நான் மட்டும் உறக்கமின்றித் தவிப்பதேன்?

யாவர்க்கும் குளிர் வெளிச்சம் தரும் வெண்ணிலா
எனக்கு மட்டும் அனலாய்த் தகிப்பதேன்?

பருவ வயதில் காதல் வயப்பட்டு..
கனவிலும் நினைவிலும் காணாததைக் கண்டு..
உண்ணப்பிடிக்கவில்லை.. உறக்கம் வருவதில்லை.. எண்ணம் வசப்படவில்லை.. என்று
பலர் கூறக் கேட்டிருக்கிறேன்..
பரிகாசித்து நகைத்திருக்கிறேன்..

ஆனால் இன்று உணர்கிறேன்..
தலைவலியும் வயிற்றுவலியும் மட்டுமல்ல..
காதலும் கலக்கமும் கூட தனக்கென்று வந்தால்தான் தெரியும் என்று....

வெயில் பட்டு தளிர்க்கும் சருகு உண்டா??
இதோ உன் முதல் பார்வை பட்டு சருகாயிருந்த என் மனம் தளிர்விட்டதே...
அது எப்படி??

மழை பட்டு சருகாய் போன பசுங்கிளை உண்டா??
உன்னுடன் பழகி பசுமையாய் தழைத்த என் மனதை
உன் பிரியாவிடைக் கண்ணீரால் சருகாக்கிவிட்டுப் போனாயே..
அதுவும் எப்படி??

இந்த நாட்களில்.. பின்னிரவுகளுக்கு சற்றுப் பின்னால்,
இரவுகளுக்கும் காலைகளுக்கும் இடைப்பட்ட வேளையில்..
என் விழிகளில் உறக்கத்துக்கும் விழிப்புக்கும் மத்தியில்..
என் மூளையின் ஏதோ ஒரு மூலையில்..
கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட நிகழ்வில்..

நடுக்கம் நீங்காத உன் கைகளை என் விரல்களால் பற்றி..
உன் விழிகளின் உள்ளே என் கண்களால் ஊடுருவி..
என் மனம் உன் மனதிடம் கேட்கும் அந்த கேள்வி..

"உனக்கு என்னை நினைவிருக்கிறதா?"

பத்து மலைகள், நூறு பாலைவனங்கள், ஆயிரம் கடல்கள், பத்தாயிரம் பெருங்கடல்கள் தாண்டி
எங்கோ ஒளிந்திருக்கிறது உன் பதில்.. எனக்குத் தெரியாமல் என் கண்களுக்கு மிக அருகாமையில்.......

-வெற்றி குமரன்

No comments:

Post a Comment