Thursday, 13 March 2014

உன் தங்கை

அன்பே நீ..
மழை நனைத்த மலர் போன்றாள்..
மலர் அனிச்சம் தாங்கா மெல்லிடையாள்..

அழகி நின் வருகைக்கு..
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம் நானும்..
என்னருகே அவளுக்கான இருக்கையும் தூணும்..

அந்த நேரத்தில்..
உன் இருக்கையில் விழுந்தது மலர் மஞ்சள் நிறம்..
எனக்குத் துணையாக அனுப்பியது நிழல் மரம்..

அந்தப் பூ..
என்னை நோக்கி உன்னைப்போல் புன்னகைத்து நின்றது..
உன் முந்தானைக் காற்றைப் போல் மணம் வீசவும் முயன்றது..

அழகிய மலரை..
இருக்கையினின்று விலக்க, விலகச் சொல்லவா?
இல்லை நீ வரும் வரை துணையாகக் கொள்ளவா??

அலர் இதுதான்..
அம்மலருக்கு உன் அழகோ மணமோ இல்லையென மறுக்கவா?
அன்றி ஏதோ தனக்குரிய பொலிவுடன் உள்ளதென ஏற்கவா??

அல்லல் நீக்க..
அன்ன நடையில் மின்னல் நகையுடன் நீ வந்தாய்..
தோழிகளாய் தென்றல், மணம், மகிழ்ச்சி கொண்டு வந்தாய்..

அடிப்பாவி
காதலர்கள் நாம் தனியே சந்திப்பதல்லவோ நியாயம்..
இப்படி தோழிகளோடு வந்து சேர்வதென்ன அநியாயம்??

அருகில் வந்துவிட்டாய்..
உன் இருக்கையில் இருக்கும் பூவை நசுக்கிவிடுவாயோ..
"நானிருக்க வேறு துணை தேடுகிறாயோ?" என என்னை பார்வையில் பொசுக்கிவிடுவாயோ..

அஞ்சிய தருணம்..
மஞ்சள் மலர் உன் அழகிலே மெழுகென உருக..
நானோ உன்னையும் உன் தங்கையையும் பார்த்து மருக..

அதிகம் யோசிக்காமல்..
உன் காந்தள் கைகளால் மஞ்சள் மலரை கீழே தள்ளினாய்..
மலர் மரத்தின் மனம் கொண்ட ஆசையை தீயில் தள்ளினாய்..

அய்யோ பாவம்..
எனக்கூவி அப்பூவை என் கைகளில் நான் எடுக்க..
கோபத்தில் உன் பார்வை அம்பை என் மீது நீ தொடுக்க..


ஆத்திரம் கொண்டு..
நீ இருக்கையில் அமராது விலகிச்செல்ல..
மலரும் மரமும் எள்ளி நகைக்கின்றன மெல்ல..

ஆயும் சேயும் சேர்ந்து..
சதி செய்துவிட்டீர்களே.. என கையில் கொண்ட மலரை நான் தூற்ற..
அம்மலரை எரிந்துவிட்டு விரைந்து செல்கிறேன் என்னவளைத் தேற்ற..

- வெற்றி குமரன்

No comments:

Post a Comment