பின் தொடரும் பித்தன்
இன்றிவனைக் கொன்றது போதும், நாளை தொடரலாமென நீ
உன் விழிவாளை உறையிலிட்டு வீடு திரும்பும் நேரம்…
கல்லூரிப் படி தாண்டும் உன்னைப் பின் தொடர்கிறோம் நானும்
நின் நிழலும்.. வாயில் விட்டு சிறகடிக்கிறாய், வான் நோக்கியல்ல..
வாகனங்கள் நிறைந்த சாலை நோக்கி.. மலர் சொரியத் தொடங்கின மரங்கள்,
கற்கள் பட்டு உன் பாதக்கமலங்கள் புண்ணாகிவிடக்கூடாதென்று..
மெல்லிய மலர்களைத் தன் தங்கைகளாக பாவிக்கும் நீ அவற்றைத்
தாக்காமல் தாவிச்செல்லுகிறாய்.. குழந்தை சிரிப்போடு..
சாலையைக் கடக்க நீ காத்திருக்க, உனைக்கண்டு சமிக்ஞை விளக்கு
வெட்க்கிச் சிவக்கிறது.. தேவதையொன்று சாலையில் வருவது கண்டு
வாகனங்களனைத்தும் செய்வதறியாது நிற்க, தேர் வரும் திசை நோக்கி நீ நடக்கிறாய் என்றெண்ணி உன் பின்னே நான் நடக்கிறேன்…
ஆனால் நீயோ பேருந்து நிறுத்தம் நோக்கிப் பறக்கிறாய்.. வியக்கிறோம், திகைக்கிறோம்.. நடைபாதையும் நானும்..
“பேருந்து நிறுத்தத்தில் தேர் வந்து நிற்குமா என்ன?” கண் சிமிட்டிக் கேட்கிறது
கம்பத்தில் விளக்கொன்று.. தெரியவில்லையென்று பதில் சொல்லித்
தலையைக் கோதுகிறேன் நான்.. மாலை நேரத்துச் சூரியன் மஞ்சள் வெளிச்சத்தை பொழிய, மர நிழலில் தஞ்சம் சேர்கிறாய் உன் நீண்ட நிழலோடு..
நானும் வந்து சேர்கிறேன் அம்மரத்தோடு.. நிழல்களாய் நாம் சங்கமிக்கிறோம்
கார் நிறத்தோடு… தொடுவானம் நோக்கித் தொலைதூரம் பார்க்கிறாய்..
உந்துகள் ஏதும் வந்தபாடில்லை, சாலை மீதொன்றும் தென்படவில்லை.. புருவம் நெறிக்கிறாய் நீ, என் இதயம் கணக்கிறேன் நான்..
போக்குவரத்துக் கழகம் ஏழேழு தலைமுறைக்கும் நஷ்டத்தில் ஓட சாபமிடுகிறேன்..
மணிக்கட்டை சற்றுத் திருப்பி.. காற்றுக்கும் வலிக்காமல் கையை உயர்த்திக் கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறாய்..
உன் குழந்தை முகத்தில் கவலையின் சாயல்.. அடுத்த சாபம் தமிழ்நாடு அரசுக்கு.. போக்குவரத்துக் கழகத்தை கண்டிக்காததற்கு..
இதற்குமேல் என் சாபத்தை பொறுக்க முடியாது என்பதுபோல் வந்து நின்றது உந்து ஒன்று.. எங்கு நிற்கிறேன், எதற்கு நகர்கிறேன் என்றறியாமல் பின்
தொடர்கிறேன் உனை..
பேருந்துப் படியின் மீது படும் உன் பாதம் நோக்கும் என்னை ஓர விழியில் சந்தேகப்பார்வை பார்க்கிறாய்.. நல்லவன் போல் நடித்து, நாவைக் கடித்து,
எதையோ தொலைத்தவன் போல் தரையைத் தேடுகிறேன்.. படியில் தொற்றிய என்னை பாசத்துடன் உள்ளே வரும்படி நடத்துனர் அழைக்க,
பொங்கி வரும் புன்னகையைக் கொன்றுவிட்டு வெறுப்பையும் நெருப்பையும் வீசுகிறாய் என் பக்கம்.. பெண்களைப் பின் தொடரும் பித்தன் இவன்
என்றெனை நினைத்தாயோ நானறியேன்.. தேவதையின் தேரில் தொற்றிச்செல்லும் வேரறுந்தக் கொடியாய் பேருந்தைப் பற்றிச்செல்லும்
பொடியன் நான்..
தொட்டாச்சிணுங்கி இலையாய் என் இமைகளும், தொட்டியை இழந்த செடியாய் என் தோள்களும், உன் பார்வை பட்டதும் படபடத்து மெலிகின்றன..
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் கூட இல்லாத அக்கரை பேருந்தின் இருக்கைகள் மீது எனக்கு.. நொடிக்கு நூறு முறை இருக்கைகள்
இருக்கின்றனவா என சரி பார்க்கிறேன்.. நீ நிற்கும் திசை நோக்கி நோட்டமிட.. வேகத்தடை மீதேறி வாகனம் குலுங்க, உன் கூந்தலில் குடியிருந்த
மல்லிகையொன்று தவறி தரையில் விழ, அதை ஆவலுடன் பார்க்கிறேன் நான்.. என் நோக்கமறிந்த நீ புருவம் நெறித்து, பூவை மிதிக்கிறாய்..
மனம் நொந்து சோகத்தில் ஆழ்ந்தவன் போல் தலை குனிந்துப் பின் புன்னகைக்கிறேன் நான்.. ரகசியமாய்.. இதுவரை உன் கூந்தலினின்று
களவாடிய நான்கு மல்லிகை, மூன்று கனகாம்பரம் மற்றும் இரண்டு ரோஜாப் பூக்களை எண்ணி.. நீ இறங்க வேண்டிய நிறுத்தம் வர,
பின் வழி நோக்கி நகர்கிறாய்.. முன்புரம் நிற்கும் என்னைத் தவிற்க. பேருந்து நிற்கும் முன் குதித்திறங்கி குரங்காக நான் தாவி வர,
உன் வெறுப்பையும் மீறி ஒரு சிறு புன்னகைக் கீற்று ஒளிர்கிறது.. படியிறங்கி வரும் உன்னை வரவேற்க மலர் தூவும் தேவ கன்னிகள் எங்கே போனார்கள்
என நான் இந்திரனைக் கண்டிக்க, உன் வீடு நோக்கி வேகமாய் நடக்கிறாய் நீ..
தேவதைகள் வசிக்கும் வசந்த மாளிகைகளெல்லம் இப்படித்தான்
கட்டுக்காவலுடன் கண்கானிக்கப்படுமோ என வியந்து பார்க்கிறேன் நான்.. உன் வீட்டு காவல்காரனையும் அவன் மீசையையும்..
“போதும், வா போகலாம்” என்று அஸ்தமிக்கும் சூரியன் என்னை அழைக்க,
“அதுவும் சரிதாண்ணே..” எனக்கூறி விடுதிக்குத் திரும்புகிறேன் நான்.
- வெற்றி குமரன்
No comments:
Post a Comment